மறுகட்டுமானம் என்ற சொல்லுக்கு, சேதமடைந்த அல்லது தகர்க்கப்பட்ட கட்டடங்களை மீண்டும் கட்டுவது என்பது பொதுவான பொருளாகும். எனினும், இச்சொல்லானது சூழமைவு, பரப்பளவு, அழிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, மிகவும் வேறுபட்ட சூழல்களையும் குறிக்கிறது. என்றாலும், சமுதாயங்கள் தங்களுடைய மரபு கட்டடங்களில் சில கூறுகளைச் சீரமைக்கவோ மீண்டும் கட்டவோ அவற்றைத் தூண்டுவது என்னவென்று அச்சொல் எதையும் குறிக்கவில்லை.

ப்ரான்கா மால்செர்வீசி – கட்டடக் கலை ஆலோசகர், விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், தேசிய கட்டடக்கலைப் பள்ளி, வெர்சாய்ஸ் (பிரான்ஸ்)

மரபுக் கட்டடங்களைப் பேணிப் பாதுகாப்பதைக் குறித்த விவாதமானது, பொதுவாக ஓர் அடிப்படைக் கேள்வியைக் காணத் தவறிவிடுகிறது: கட்டடங்களையோ கட்டட வளாகங்களையோ சமுதாயங்கள் ஏன் பாதுகாக்க முயல்கின்றன? மரபைச் சுமந்துநிற்கும் எதுவும்- எதிர்காலத் தலைமுறையினருக்குக் கையளிக்க வேண்டுமென்று உறுதிசெய்யப்பட வேண்டிய சிறப்புத் தகுதிநிலை கொண்ட-  ஏன் அவ்வாறு கையளிக்கப்பட வேண்டும், எனினும் அக்கேள்வி நம்மை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.

இடைக்காலத் தேவாலயங்களோ மாநகரங்களின் புறநகர்ப்பகுதிகளில் உள்ள சுயதேவைகளுக்கான தோட்டங்களோ, அல்லது அது போன்று பண்பாட்டின் கூறுகளாகக் கருதப்படுவனவற்றின் இழப்பு குறித்து வளர்ந்துவரும் விழிப்புணர்வானது கட்டடங்களைப் பாதுகாப்பதில் உள்ள முக்கியமான வளர்ச்சிநிலைகளுடன் தொடர்புடையதாகும். மரபான கட்டடங்களுக்கான தகுதிநிலை என்பது அக்கட்டடங்களின் சேதங்களுக்கு அல்லது அழிவுகளுக்கும்கூட வகைசெய்யும் அதிகாரமிக்க சக்திகளுக்கான எதிர்வினையாகவே இருக்கிறது. வெவ்வேறு நிலைகளில் புதிய அடுக்குகளைச் சேர்த்துத் தங்களது சூழமைவைக் கட்டமைத்துக்கொண்ட பண்பாடுகள், தற்போது தீவிர எழுச்சியுணர்வுக்கு உள்ளாகியுள்ளன. தொழில்மயமாக்கம், விரைவான நகரமயமாக்கம், குடியிருந்துவந்த பகுதிகளைக் கைவிட்டு வெளியேறல் ஆகியவை பழைய கட்டடங்களைப் பாதுகாப்பதில் செயலூக்கம் கொண்ட முயற்சிகளை முடுக்கிவிடுகின்றன. மரபு கட்டுமானம் என்ற சிறப்புரிமையானது, முதன்மையான ஆபத்தான நிலையிலிருக்கும் கட்டடங்களுக்கு வழங்கப்படுவதாகும். உதாரணத்திற்கு, தொழில்துறை மரபு கட்டுமானம் என்ற கருத்தைப் பொறுத்தவரையில், அது ஐரோப்பாவில் தொழில்துறை நடவடிக்கைகளைக் குறைப்பதோடும் பழைய தொழிற்சாலைகளைக் கைவிடுதல், இழத்தலோடும் நேரடியாகத் தொடர்புடையதாகும்.

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை

இதே உதாரணத்தையொட்டி, போர்களையும் இயற்கைப் பேரிடர்களையும் அடுத்து மரபு கட்டடங்களை மறுகட்டுமானம் செய்யும் ஒரு பேரெழுச்சி உருவாகியுள்ளது. ஒரு கட்டடத்தை மறுகட்டுமானம் செய்வது என்பது, அடிப்படையிலேயே நேர்மறையான ஒரு முன்னெடுப்பு, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அது எடுத்துக்காட்டுவதோடு, ஒரு நிகழ்வின் அதிர்ச்சிகர விளைவுகளைச் சரிசெய்யும் விருப்பத்தின் மீது அது நிலைகொண்டுள்ளது. எனினும், மரபுக் கட்டடமொன்றை மறுகட்டுமானம் செய்வதைக் குறித்து பேசும்போது நாம் என்ன பொருள் கொள்கிறோம்? அந்தச் செயல், ஒப்பிட இயலாத அளவுக்குப் பரந்துபட்ட செயல்பாடுகளை உள்ளடக்கியது.

அச்சொல்லின் பயன்பாடு தற்போது மிகவும் பரந்ததாகவும், அவ்வப்போது பொருத்தமில்லாததாகவும் உள்ளது. 2019இல் பாரிஸில் உள்ள நோத்ர தாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அது பெரும் கட்டுமானத் தளமாக மாறியபோது பத்திரிகைகளால் அது ‘கதீட்ரல் மறுகட்டுமானத் திட்டம்’ என்று குறிப்பிடப்பட்டது. அவை கலை வரலாற்று நோக்கிலும் பார்வையாளர்கள் நோக்கிலும் பொதுவாக அவ்வாறு கூறப்பட்டாலும், அதிர்ஷ்டவசமான அப்பெருங்கட்டடத்தின் பெரும்பகுதி தீ விபத்தால் சேதமடையவில்லை. உதாரணமாக, அதன் மேற்குப் பகுதியானது பாரிஸின் நிலவெளிப் பின்னணியை இழக்காததோடு, பல்வேறு நூற்றாண்டுகளாகக் கூடிச் சேர்ந்துவந்த புதுமைகளுக்கும் சாட்சியாகவே தொடர்கிறது.

ஆக, சேதமுற்றதன் பரப்பளவு குறித்ததே முதலாவது கேள்வியாகும். பெரும்பாலான கட்டடங்களின் வீழ்ச்சி குறித்துக் கேள்வியெழுகையில், புதியதொரு பெருங்கட்டடத்தை எழுப்புவது என்பதைக் காட்டிலும் ஒட்டுமொத்த அளவு, முகப்பின் அமைப்பு, அலங்காரக் கூறுகளுக்கான பொது ஏற்பாடு என இழந்த நினைவுச்சின்னத்தின் சில அம்சங்களை மட்டுமே மறுவுருவாக்கம் செய்தல் என்னும் தேவையையொட்டியதாகவே செயல்பட வேண்டும்.

புதிய கட்டுமானத்திற்கும், முன்பிருந்த ஒன்றுக்கும் இடையிலான உறவு என்பது மீண்டும் பயன்படுத்தப்படும் பொருள்களின் அளவு, கட்டுமானப் பணிகளை முடிக்கும் விதங்களையும் அலங்காரங்களையும் மறுவுருவாக்குதல் ஆகியவற்றுக்கேற்ப மாறுபடக்கூடியது, இவை சற்றேறக்குறைய கடினமானதும், முன்பிருந்த கட்டடத்திற்கு உண்மையானதுமாக இருக்கலாம். முடிவு என்பது எப்போதுமே குறிப்பிடத்தக்க பண்பாட்டு, நகர, சமூக அல்லது குறியீட்டு நிலையாகப் பங்குவகிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கூடிய புதியதொரு கட்டடமாகவே இருக்க முடியும்; அக்கட்டடம், இழந்துபோன நினைவுச்சின்னத்துடன் தொடர்புடைய வகையில் தன்னளவில் தனித்ததோர் ஆயுள் காலத்தைக் கொண்டிருக்கும். முன்பிருந்ததைத் தழுவி தனக்கென்று தனி வரலாற்றையும் அது கட்டப்பட்ட கணத்திலிருந்து தனது காலத்தையும் தொடங்கும்.

கால வரையறைகள்

கால வரையறையைக் கவனத்தில் கொள்வதும் அத்தியாவசியமானதாகும். முந்தைய யுகாஸ்லாவியாவில் நடந்த மோதலில் 1993ஆம் ஆண்டில் குண்டுவீச்சால் தகர்க்கப்பட்ட மோஸ்டார் பாலத்தை (போஸ்னியாவுக்கும் ஹெர்ஸிகோவினாவுக்கும் இடையிலானது), அதிர்ச்சியளிக்கும் அத்துயரத்திற்கு அடுத்த சில ஆண்டுகளில் மறுகட்டுமானம் செய்யத் தொடங்கியதையும், ட்ரெஸ்டெனில் உள்ள ப்ரான்கெர்ச்சே தேவாலயத்தின் (ஜெர்மனி) மறுகட்டுமானத்தை, அதன் வீழ்ச்சிக்குப் பிறகு 60 ஆண்டுகள் கழித்து, 2005இல் தொடங்கிவைத்திருப்பதையும் நம்மால் ஒப்பிட முடியுமா? அங்கு வாழ்ந்தவர்களிடையே அந்த அதிர்ச்சியை நேரில் அனுபவித்தவர்களின் சதவிதமானது எப்போதுமே ஒப்பிடக்கூடியதல்ல, இழப்புக்கான ஈடு கோருவதும்கூட காலக்கிரமமானதல்ல.

காலத் தொடர்பில், கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாத மற்றோர் அம்சம், ஒவ்வொரு கட்டட வகைமாதிரிக்குமான எதிர்பார்க்கப்படும் ஆயுளும், அதன் கட்டுமான கால அளவு, மேம்பாட்டுத் திட்டம், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடுகளுடன் இது தொடர்புடையதாகும். தொடர் பராமரிப்பைக் கோரும் களிமண் செங்கற்களாலான குடியிருப்பில் தொடங்கி நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் கற்கோட்டைகள் வரையிலான பரிணாமத்தையும் தொழிற்சாலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு சில பத்தாண்டுகளுக்கு நீடிக்கும்வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? காலகட்ட மாறுபாடுகளின் காரணமாக, பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், திட்டமிட்ட பயன்பாடுகள், கட்டடமொன்றின் ஆயுள், அதில் உள்ளடங்கியிருக்கும் பகுதிகள் ஆகியவை ஒத்திருக்க வாய்ப்பில்லை.

பேரிடர் அல்லது அதுபோன்ற எதிர்பாரா நிகழ்வுகளின் காரணமான மறுகட்டுமானம், வெவ்வேறு வகைப்பட்ட பதிலீட்டுப் பொருள்களின் ஒருங்கிணைவாக அமையும். அவற்றை வாங்கிச் சேகரிப்பதற்கான கால அளவும் முக்கியமானதொரு காரணியாகும். உதாரணத்திற்கு, அதுபோன்ற கட்டடங்களைத் தொடர்ந்து உருவாக்குகிறவர்களின் தொழில்திறன்கள் பயன்படுத்த வாய்ப்பாக அமைகையில், மறுகட்டுமானங்களும் அதுபோன்ற பராமரிப்பைப் பெறவியலும். அல்லாமல், வெட்டியெடுக்கப்பட்ட கற்பலகைகளைக் கொண்டு கூரையிடுவது போன்று நூற்றாண்டு காலமாக வழக்கிலிருந்து தற்போது பயன்படுத்தப்படாத கட்டுமானப் பொருள்கள், அலங்கார அம்சங்கள் அல்லது கட்டமைப்புத் தீர்வுகள் ஆகியவற்றை மறுகட்டமைப்பு சார்ந்திருந்தால், சூழல் முற்றிலும் மாறுபட்டதாக அமையும்.

அத்தகைய சூழலில், மறுகட்டுமானப் பணியில் ஈடுபடுகின்ற ஆண்களும் பெண்களும், மாறுபட்ட உலகப் பார்வையையும் வேறுபட்ட அழகியல், தொழில்நுட்ப நோக்கினையும் கொண்டுள்ளனர். வடக்கு பிரான்ஸில் உள்ள அராஸ் நகர அரங்கத்தைப் பொறுத்தவரையில், கட்டமைப்புத் தீர்வுகள் உள்ளிட்ட மறுகட்டுமானத்தின் திட்டமுறை முழுவதுமே அதன் முன்பிருந்த கட்டமைப்புக்கு அந்நியமாகவே உள்ளது. முதல் உலகப் போரின்போது சேதமான அவ்வரங்கமானது, இரும்புக் கம்பிகளுடன் கூடிய கான்கிரீட் கலவை அமைப்புமுறையைப் பயன்படுத்தி மறுபடியும் கட்டப்பட்டுள்ளது.

நிலவெளியுடன் ஒருங்கிணைவு

மறுகட்டுமானது தனித்ததொரு செயல்முறையும் அன்று. ஒரு மரபு கட்டடம் அல்லது மறுகட்டுமானத் தொகுப்பு என்பது நகர நிலவெளி மற்றும் பரந்துபட்ட சூழமைவின் ஒரு பகுதியாகும். சொல்லப்போனால், மரபு கட்டடமொன்றின் மறுகட்டுமானம் என்பது, சில வேளைகளில் நகர மீட்டுருவாக்கம், சுற்றுலா மேம்பாடு, அடையாள உறுதிப்பாடு அல்லது எல்லையின் மீது உரிமை கோரல் ஆகியவற்றுடன் முரண்படுகிற அரசியல், அயலுறவு, சமூக, பண்பாட்டு இயக்கங்களுடன் தொடர்புடைய செயல்முறையொன்றின் பகுதியாகும். மிகவும் சிக்கலான வாய்ப்புள்ள இச்சூழல்கள் மறுகட்டுமானம் செய்யப்பட்ட மரபு கட்டடத்திற்கும் எவ்வளவு முயன்றாலும் மீண்டும் கட்டப்பட முடியாதவகையில் முற்றிலும் அழிந்துபோன ஒன்றுக்கும் இடையிலான தவிர்க்கவியலாத வேறுபாட்டில் தெளிவின்மையை ஏற்படுத்திவிடக் கூடாது.

அதிர்ச்சிகர அனுபவங்களிலிருந்து சமூகங்கள் மீண்டுவர உதவும் இந்த ‘மறுவுருவாக்கங்கள்’ தொடர்பில், நம்மை நாம் எப்படி நிலைப்படுத்திக்கொள்வது? மறுகட்டுமானம் செய்யப்பெற்ற மரபு கட்டடம் ஒன்றை, இழந்த கட்டடத்திற்கான மாற்றீடாகக் கருதாமல், அதையோர் இழப்பீட்டு வடிவமாகக் கருதுவதே நல்லதொரு தொடக்கப்புள்ளியாக அமையுமெனத் தோன்றுகிறது. இன்றைய நாள்களில், இயற்கை வளங்களைச் சுரண்டும் பொருளியல் நடவடிக்கைகள் காலநிலை மீது உண்டாக்கும் அதிர்ச்சிகர விளைவுகள், ஈடுசெய்ய இயலாவண்ணம் இயற்கை வளங்கள் அழிப்பு ஆகியவையும்கூட முக்கியக் கவனத்திற்குரியவை. மரபு கட்டடமொன்றின் மறுகட்டுமானத்தில் ஈடுபடுத்தப்பட்ட வளங்களையும் கட்டுமானப் பொருள் வளங்களையும் பாராட்டுகையில், மீண்டுமொருமுறை அதைக் கட்டுவதைத் தவிர்க்கும்வகையிலும், போர்களையும் பேரிடர்களையும் தடுக்கும்வகையிலும், வெள்ளங்களைத் தாங்கும்வகையிலும் இயன்ற அளவுக்கு முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் முக்கியமானதாகும்.

‘தி யுனெஸ்கோ கூரியர்’, அக்-டிசம், 2025.

மறுகட்டுமானம், மீட்டமைப்பு, சீரமைப்பு: என்னென்ன வேறுபாடுகள்?

மறுகட்டுமானம் (Reconstruction):

சேதமுற்ற பண்பாட்டு உடைமையை அதன் முந்தைய வரலாற்று நிலைக்கு – அல்லது ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்பட்சத்தில், அதன் அசல் நிலைக்கு – அக்காலக்கட்டத்தின் கட்டுமான முறைகளைப் பின்பற்றிக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் நேரடி தலையீடு.   

மீட்டமைப்பு (Restoration):

கட்டடத்தின் மரபு மதிப்பைப் பாதுகாக்கவும் அதைத் தொடரவும் அதன் முந்தைய நிலையை நோக்கித் திரும்புதல். மூலக் கட்டுமானத்தின் கட்டுமானத் திட்டங்கள் தக்கவைத்துக்கொள்ளப்படும், கட்டுமானப் பொருள்களைப் பொறுத்தவரையில் இயன்றவரையிலும் தக்கவைத்துக்கொள்ளப்படும். மீண்டும் அவை பயன்படுத்தப்படும், மிக மோசமாக அவை சேதமடைந்திருக்கும் நிலையில் அதையொத்த கட்டுமானப் பொருள்களால் ஈடுசெய்யப்படும்.

சீரமைப்பு (Rehabilitation):

தற்போதுள்ள கட்டடத்தைச் சமகாலத் தேவைகளை நிறைவேற்றுக்கொள்ளவும், மேலும் புதிய வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும், நவீனப்படுத்திக்கொள்ளவும் தக்கவகையில் மாற்றிக்கொள்ளுதல்; அதே வேளையில் அதன் கட்டுமானக் கலையம்சங்கள் மதிக்கவும் பாதுகாக்கவும்படும். சீரமைப்பானது ஒரு கட்டடம் புதிய பயன்பாடுகளையும் அணுகல் வசதி, தீ விபத்துகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றுக்கான புதிய ஒழுங்குமுறைகளையும் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

Leave a comment