அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர் அலெக்ஸ் என்னும் பெயர் சமூக ஊடகத் தளத்தில் முன்வரிசையில் வந்து நின்றது. யாரிந்த அலெக்ஸ் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்நிகழ்ச்சி. தனது நகைச்சுவை நிகழ்ச்சிக்கு அலெக்ஸ் எடுத்துக்கொண்ட திரைப்படப் பாடல்கள் என்னும் களம் பழையது என்றபோதும், களத்தை அவர் கையாண்டவிதம் மிகவும் புதுமையானது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பலகுரல் மன்னர்கள் மூர்த்தி கோபி எனும் இருவர் புகழ்பெற்ற பாடல்களில் மெட்டில் நகைச்சுவைப் பாடல்களைப் பாடி ஒலிப்பதிவு நாடா வெளியிட்டுப் புகழ்பெற்றிருக்கிறார்கள். திரைப்படப் பாடல்களைக் களமாகக் கொண்டு பட்டிமன்றம் நடத்திப் பெயர்பெற்றார் திண்டுக்கல் லியோனி. அந்த வகையில், வழக்கமாக நண்பர்கள் உரையாடிக்கொள்ளும்போது, பேசிக்கொள்ளும் திரைப்பாடல்களைக் களமாக எடுத்து தனது நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தார் அலெக்ஸ். நமக்கு நன்கு அறிமுகமான பாடல்கள், ஆளுமைகள் ஆகியோரை பகடி செய்யும் அதே நேரத்தில் அவர்களது திறமையையும் எடுத்துச் சொல்லி அவர் நிகழ்த்திக்காட்டிய நகைச்சுவை நிகழ்ச்சி ஆரோக்கியமான நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது. மூர்த்தி கோபி, லியோனி போன்றோரிடம் தென்படாத இந்தக் காலத்துக்கு அவசியமான ஒரு புத்திசாலித்தனம் அலெக்ஸிடம் வெளிப்படுகிறது. அதுதான் அவரது சிறப்பாகவும் உள்ளது.  

அதன் பின்னர் அலெக்ஸாண்டர் பாபு என்னும் பெயரிலேயே யூடியூப் அலைவரிசையை உருவாக்கிப் பாடல்கள் தொடர்பான வெவ்வேறு காணொலிகளைப் பதிவேற்றிவந்தார். பழைய பாடல்களை எடுத்துக்கொண்டு, பாடல் வரிகள், பின்னணி இசை, பாடல் காட்சிகள் போன்ற பல விஷயங்களை நுண்ணிய இழைகளாகப் பிரித்து மேய்வது அலெக்ஸுக்குக் கைவந்த கலையாயிற்று. பாடல்களின் வரிகளையும் இசை ஒலிகளையும் அவர் விவரிக்கும் விதம் அலாதியானது. அதில் நகைச்சுவை இழையோட அவர் பகிர்ந்துகொள்ளும் பாங்கு நெருங்கிய நண்பருடன் நடைபெறும் உரையாடல் போன்றது. ஆகவே, அவரது நிகழ்ச்சி சட்டென்று மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறது.

அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் பலமுறை மேடைகளில் வெற்றிகரமாக நிகழ்த்திய அலெக்ஸ்பீரியன்ஸ், அவரே சொந்தமாகத் தொடங்கியுள்ள அன்பா டிவி வழியே ரசிகர்களுக்குப் பார்க்கக் கிடைக்கிறது. அன்பா செயலியைப் பதிவிறக்கி, நிகழ்ச்சிக்கான பணத்தை இணையவழியில் செலுத்திவிட்டால் முழுமையாக நிகழ்ச்சியை  ரசிக்க முடிகிறது.  இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, வெறும் நகைச்சுவை என்பதற்கும் அப்பால் கலைவழியே நமது வாழ்வைப் பேசுகிறார்; நாட்டு நடப்புகளைச் சொல்கிறார். நாம் கடந்துவந்த பாதையின் களிப்புகளைக் கதை கதையாகச் சொல்கிறார். நமது வாழ்க்கை முறை மாறிவிட்ட துயரத்தைச் சிறிதும் துன்பம் அணுகாமல் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறார். ஒருவகையில் சார்லி சாப்ளின் மாதிரியான உத்தியைக் கையிலெடுத்துச் சிரிக்கவைத்தாலும் சிரிப்பின் முடிவில் சிந்திக்கவும் வைக்கிறார். பெரும்பாலும் ஆங்கிலம் இடையிடையே தமிழ் என்ற வகையில் அவர் உரையாடலை நகர்த்திச் சென்றாலும் அடிப்படையான ஆங்கில அறிவு கொண்டோரைக்கூட அவரது உரையாடல் உரிமையுடன் சட்டென்று அள்ளி அணைத்துக்கொள்கிறது.

இந்நிகழ்ச்சியில், வேற்றுமையில் ஒற்றுமை என்னும் எப்போதைக்குமான எளிய கருத்தை அவரது பாணியில் அநாயாசமான போதத்துடன் எடுத்துவைத்துள்ளார் அலெக்ஸ். ஏறத்தாழ மூன்றே கால் மணி நேரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தனி ஒருவராக மனிதர் சளைக்காமல் களமாடுகிறார். நிகழ்ச்சியை எவ்வளவு உற்சாகமாகத் தொடங்குகிறாரோ அவ்வளவு உற்சாகத்துடன் நிகழ்ச்சியை நிறைத்து சிறிதுகூடக் களைப்பின்றி நிகழ்ச்சியை நிறைவுசெய்கிறார்.

நிகழ்ச்சியின் திரைக்கதையை அவர் அமைத்துள்ள விதம் எளிமையானது ஆனால், மிகவும் புத்திசாலித்தனமானது. எல்லோரும் அறிந்த எளிய செய்திகளைக் கையில் எடுத்துக்கொண்டு அதில் மறைந்திருக்கும் நுட்பங்களை விவரிப்பதன் வாயிலாக வாழ்வின் வெளிச்சத்தைக் காட்டுகிறார். அதனாலேயே இந்நிகழ்ச்சியை நம்மால் முழுமையாக ரசிக்க முடிகிறது. ஓர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பார்வையாளர்களை மிகவும் நெருக்கமாக வைத்துக்கொள்கிறார். அவர்களுடன் பெயர் சொல்லிப் பேசி உரையாடுகிறார். பாடுகிறார்; நடன அசைவுகளை வெளிப்படுத்துகிறார்; மிமிக்ரி செய்கிறார். இப்படித் தனியொருவராக மேடை முழுவதும் ஆக்கிரமிக்கிறார். ஆனால், ஒரு நொடிகூட அலுப்பை ஏற்படுத்தவே இல்லை. அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

அரசியல், மதம் போன்ற சிக்கலான பேசுபொருள்களைக் கத்திவிளிம்பால் காற்றூதப்பட்ட பலூனை வருடுவதுபோல் வருடும்விதமாக, எந்த இடத்திலும் எல்லை மீறாமல் மிகக் கவனமாகக் கனமான விஷயங்களைக் கையாள்கிறார். ஒரு மந்திரவாதி வெற்றுக் கையிலிருந்து புறாவை எடுத்து இயல்பாகக் காற்றில் பறக்கவிடுவதுபோல் புன்னகைப் பறவையை அரங்கில் படபடக்கவிடுகிறார். முந்தைய நிகழ்ச்சியுடன் இந்நிகழ்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால், கலையின் வழியே தான் நம்பும் கருதுகோள்களையும் சொல்லிப் பார்த்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார். அதே வேளையில் கருத்து கந்தசாமி எனும் வட்டத்துக்குள் மாட்டிக்கொள்ளவில்லை.

சுவைமிகு பஞ்சுமிட்டாய் தயாரிப்பது போல் ஒரு மாதிரி என்னவெல்லாமோ மாய வித்தை காட்டுகிறார். எங்கெங்கோ போகிறார்; எதையெதையோ பேசுகிறார். ஆனால், எல்லாம் நமக்குத் தேவையானதாக இருக்கிறது. கணியன் பூங்குன்றனார் பற்றிப் பேசுகிறார், திடீரென மாண்புக்குரிய நம் பிரதமரைக் குறித்துப் பேசுகிறார். விமர்சனபூர்வமான விவாதங்களை ஏற்படுத்தும் வகையிலான வாக்கியங்களைப் பொறுக்கிஎடுத்துப் பேசுகிறார். அதே நேரத்தில், நம்மை எந்த வகையிலும் அழுத்தாமல் தாம் சொல்ல வந்ததை அழுத்தமாக முன்வைக்கிறார். அந்த நுட்பம் அப்படியே நம்மை வசீகரித்துவிடுகிறது.

அலெக்ஸ்பீரியன்ஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, பெரிய அளவில் பேசப்படாத மிகவும் சராசரியான மூன்று படங்களைத் தாம் தனது நிகழ்ச்சியின் மையச் சரடாகப் பயன்படுத்தியிருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களான எனக்குள் ஒருவன், பந்தம், மலையாளப் படமான ஒன்னானு நம்மள் என்னும் அந்த மூன்று படங்களை இரண்டாயிரத்துக் குழந்தைகள் எத்தனை பேர் அறிந்திருப்பார்களோ தெரியவில்லை. அந்தப் படங்கள் வெறும் நிமித்தம்; அந்தப் பாடல்கள் ஒரு தூண்டுகோல். அவற்றின் பின்னணியில், கடந்த காலத்தை ஒரு கையிலும் நிகழ்காலத்தை மறு கையிலும் வைத்திருப்பதால் அவரால் இளைஞர்கள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் எதிர்காலப் பாதைக்கான வெளிச்சத்தைக் காட்ட  முடிகிறது. ஒரு நல்ல இலக்கியப் பிரதி  செய்திருக்க வேண்டிய வேலையை, வெறும் உரையாடல் மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார்.  

நடிகர் கமல் ஹாசன், ஷோபனா, ஸ்ரீபிரியா நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய எனக்குள் ஒருவன் படத்தில் இடம்பெற்ற, பி.சுசிலா பாடிய தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி… என்னும் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதில் தொடங்கி ஒரு பெரிய வட்டமடிக்கிறார். இடையிடையே மத நல்லிணக்கம், அரசியல் இடித்துரைப்பு உள்ளிட்ட பல செய்திகளைச் சொல்கிறார். எந்த இடத்திலும் அடப்போங்கப்பா என்னும் எண்ணம் தோன்றாவண்ணம் எல்லாவற்றையும் சொல்கிறார்.

ஒரு வகையில் இந்நிகழ்ச்சியே ஒரு பரிசோதனை நிகழ்ச்சிதான். ஏனெனில், ஐந்து நிமிடம்கூட நேரமெடுத்துக்கொள்ளாத ஒரு பாடலை எடுத்துக்கொண்டு மூன்று மணி நேரத்திற்குப் பேச வேண்டும் என்றால் யோசித்துப் பாருங்கள். ஆனால், ஒரு நொடிகூட யோசிக்காமல் சட்சட்டென்று வந்துவிழுகின்றன நகைச்சுவைத் தெறிப்புகள். அவரது நகைச்சுவைத் தெறிப்புகள் அரங்கை சிரிப்பில் மிதக்கவிடுகின்றன. இந்தா வச்சுக்க… வேண்டிய மட்டும் எடுத்துக்க… என்று சொல்லும்வகையில் நகைச்சுவையை அள்ளி இறைத்திருக்கிறார். வெறும் தெறிப்புகள் என்றுகூடச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவை நகைச்சுவைத் தருணங்கள். இது ஒரு நான்லீனியர் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோதான். நூல் பிடித்ததுபோல் ஒன்று, இரண்டு, ஒன்று என அலெக்ஸ் வரிசையாகச் செல்லவில்லை. ஒன்று, ஒன்பது, நான்கு, ஆறு, எட்டு என எங்கெங்கோ எந்தத் தர்க்கத்திற்கும் அடங்காத வரிசையில் மாறி மாறிச் செல்கிறார். ஆனால், எங்கெங்கு சென்றபோதும், தட்டுத்தடுமாறாமல் தடம் மாறாமல் எதைச் சொல்ல வேண்டும் என்னும் தெளிவுடன் ஒரு தெளிவான திரைக்கதையுடன் பயணம் செல்கிறார். அதனால்தான் பார்வையாளர்கள் அவரைப் பின்பற்றிச் செல்ல முடிகிறது.  

சட்டென்று உணர்வைத் தூண்டும் செய்திகளை, சுள்ளென்று உறைக்கும் பச்சை உண்மைகளை நகைச்சுவையில் முக்கியெடுத்து நாசூக்காக நீட்டிவிடுகிறார். மறுத்துரைக்காமல் அவற்றை இன்முகத்துடன் பெற்றுக்கொள்ளும் இணக்கமான சூழலை இதமாக உருவாக்கிவிடுகிறார். அந்த இடத்தில்தான் ஒரு கலைஞனாக உருக்கொள்கிறார். மூன்று மணி நேரத் திரைப்படத்தை வெற்றிபெறவைக்க, இந்தியா முழுக்க அலைந்து திரிந்து பெரிய பெரிய நட்சத்திரப் பட்டாளங்களை அழைத்துவந்து தம் படங்களை நிறைக்கிறார்கள் பெரிய நடிகர்கள். படத்தை வெற்றிபெறவைக்கத் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள். உள்ளடக்கத்தை நம்பாமல் உயரிய நிலை நடிகர்களை நம்பி அப்படியான படங்களை உருவாக்குகிறார்கள். அதனால்தான் அப்படி உருவாக்கப்பட்ட அந்தப் படம் நான்கு நாள்கள்கூடத் தாங்குவதில்லை; பல்லிளித்துவிடுகிறது. ஆனால், மிகவும் சாதாரண திரைப்படங்களை, திரைப்பாடல்களைப் பேசுவதன் வழியாக வாழ்வின் ஏற்றதாழ்வுகளை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தேவை என்பதை ஒரு தேர்ந்த உளவியல் நிபுணர் போல வழங்குவதால்தான், எந்த நட்சத்திரப் பின்புலமும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியைச் சிறிதும் சுவை குன்றாமல் தொடர்ந்து அளிக்க அலெக்ஸால் முடிகிறது. அதற்குப் பின்புலமாக உள்ள அலெக்ஸின் பெரும் உழைப்பை மதிக்கத் தோன்றுகிறது.

நிகழ்ச்சி தொடங்கும்போதே இந்த நிகழ்ச்சியில் ஒரு பாடலைப் பற்றித் தான் பேசப் போகிறேன் என உண்மையைப் பூசணிக்காய் போல் போட்டு உடைத்துவிடுகிறார். ஆனாலும், பார்வையாளர்கள் உன்னை நம்பி எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம் என நம்பிக்கையுடன் அரங்கில் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியிலும் கமல் ஹாசன், சிவாஜி கணேசன் தொடங்கி மம்முட்டி, மோகன் லால் எனப் பலரைத் தமது நகைச்சுவையால் பதம்பார்த்துவிடுகிறார்.

பிரிவினை வாதம் தேசத்தைக் கூறுபோட்டுக்கொண்டிருக்கும் வேளையில் எளிய அன்பின் அவசியத்தை எல்லோரும் ஒன்றுசேர்ந்து எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆழமான அக்கறையை அலெக்ஸ் போன்ற கலைஞர்கள் வெளிப்படுத்தும்போது, சமூகத்தில் சின்ன சின்ன மாற்றங்களுக்கு அது வழிகோலத்தானே செய்யும்? மனிதநேயத்தை வலியுறுத்தவும் மனித மாண்புகளைச் சுட்டவும் கலை என்பதைப் பயன்படுத்தும் கலைஞர்களைப் பொதுச் சமூகம் ஆதரிக்கத்தானே வேண்டும்? அப்படியொரு கலைஞராக அலெக்ஸ் நிமிர்ந்து நிற்கிறார்; அவரை ஆதரிக்க வேண்டிய நாம் அவர் முதுகில் தட்டிக்கொடுப்போம். ஜெய் ஹிந்த்… பாரத மாதாகீ ஜே… எனும் வெறியேற்றும் முழக்கங்களுக்கு மாற்றாக யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் தொல் தமிழ் மாந்தனின் மாண்பை நவீன மனிதர்களுக்குப் புரியும் வகையில் சொல்லியிருக்கும் அலெக்ஸின் பணி தொடரட்டும். அலெக்ஸ் போல் எண்ணற்ற கலைஞர்கள் தோன்றட்டும்… நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கட்டும்.

– செல்லப்பா

Leave a comment