நெடுங்காலமாக நிலவிவரும் கருத்துகளின்படி, மனித சமுதாயங்கள் அதன் தொடக்கத்தில் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வந்த சமத்துவம் கொண்ட குழுக்களாக ஒருங்கிணைந்து இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தன. கால்நடை வளர்ப்பும் வேளாண்மையின் மேம்பாடும்- அதன் விளைவான செல்வச் சேர்க்கையும்- சிக்கலானதும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டதுமான சமுதாயங்கள் உருவாவதற்கு இட்டுச் சென்றன. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஒப்பீட்டுத் தொல்லியல் துறைப் பேராசிரியரான டேவிட் வென்க்ரோவ், மனித சமுதாயங்களின் இயல்பான பரிணாமம் குறித்த இந்தக் கருத்தை மறுக்கிறார். மானுடவியலாளர் டேவிட் க்ராபேருடன் இணைந்து இவர் எழுதிய ‘ஒவ்வொன்றின் தோற்றமும்’ (‘தி டாவ்ன் ஆப் எவரிதிங்க்’ 2021) அதிகம் விற்பனையாகும் நூல்களில் ஒன்றாகியுள்ளது.

நேர்காணல்:
லெத்திஸீயா கேசி, யுனெஸ்கோ
நீங்களும் மானுடவியலாளர் டேவிட் க்ரேபரும் இணைந்து எழுதிய ‘ஒவ்வொன்றின் தோற்றமும்’ நூலில் வேளாண்மையும் அதிகாரப் படிநிலை அமைப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற கருத்தை மறுக்கிறீர்கள். எந்தெந்தக் காரணங்களின் அடிப்படையில்?
தனிச்சொத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட அரசும் உருவெடுக்க வேளாண்மையே உதவியது என்ற கோட்பாடே ஐரோப்பிய அறிவுலகக் காலகட்டச் சிந்தனைகளின் அடிப்படையாகும். அதே நேரத்தில், உலகெங்கும் உள்ள மக்களிடமிருந்து அவர்கள் பின்பற்றிவந்த கண்டுணரக்கூடிய மற்றும் அறிவுசார் சொத்துகளுக்கான சுயமான சொத்துரிமைக் கோட்பாடுகளுக்கு மாறாக, நிலங்களையும் வளங்களையும் ஐரோப்பா கையகப்படுத்திக்கொள்வதை நியாயப்படுத்தும் சட்டரீதியான கருவியாகவும் இக்கோட்பாடு விளங்கியது. இறுதியில், இந்த அணுகுமுறையைக் கேள்விக்குட்படுத்தத் தொடங்கியதும், தொல்லியலாளர்கள் உண்மையில் தாமதமாகவே இவ்விவாதத்தில் பங்கேற்கின்றனர்.
அப்படியிருந்தும் இந்தக் கதையாடல் இன்னும் தொடர்வது ஏன்?
சொத்துடைமை அமைப்புகளும் சமூக அமைப்பின் சிக்கல்களும் வேளாண்முறையிலிருந்தே உருவாயின என்ற கதையாடல் இன்னமும் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம், மனித நாகரிகத்தின் இயல்பு, அதன் வளர்ச்சி குறித்த நமது நவீன கால நம்பிக்கைகளுக்கு இக்கதையாடல் அடிப்படையாக இருப்பதுதான். இத்தகைய நம்பிக்கைகள் ஐரோப்பிய அரசியல் சிந்தனைகளோடும் சட்டத் தொகுப்புகளோடும் ஊடுபாவாகப் பின்னிப் பிணைந்துள்ளன. பொருளியல், அரசியல் தத்துவம் உள்ளிட்ட நவீன கால சமூக அறிவியல் துறைகளுக்கான அடிப்படையை உருவாக்கிய ஜான் லாக், ஜீன் ஜாக்குவாஸ் ரூஸோ, ஆடம் ஸ்மித் போன்ற அறிவொளிக் காலச் சிந்தனையாளர்களுக்கும் இது பொருந்தும். ஆழமாக வேரூன்றிவிட்ட இந்தக் கருத்துகளைக் களைய வேண்டுமெனில், அதன்பொருட்டு மிகப்பெரும் எண்ணிக்கையில் நிகழ்த்தப்பட்ட உரிமைமீறல்களுக்கும் அதற்கான இழப்பீடுகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.
பண்டைச் சமூகங்கள் நாம் முன்பு எண்ணியிருந்ததை விடவும் மிகவும் மாறுபட்டவகையில் அமைந்திருந்ததை அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித வரலாறு குறித்த நமது புரிதல்களை அந்த ஆய்வுகள் எப்படி மாற்றியமைத்துள்ளன?
கடந்த சில பதிற்றாண்டுகளில், மனித வரலாற்றை மிகவும் ஆதாரபூர்வமான வகையில் புரிந்துகொள்வதற்கான அடிப்படையொன்றைத் தொல்லியல் ஆய்வுகள் வழங்கியுள்ளன. மேலும், நூற்றாண்டுகளுக்கு முந்தைய அறிவொளிக் காலத்து தத்துவவியலாளர்களின் ஆதாரமற்ற அனுமானங்களைப் போல அவை அமையவில்லை என்பதிலும் ஆச்சரியமில்லை. உதாரணத்திற்கு, வேளாண் முறை தொடங்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பே வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த சமூகங்களில் சமத்துவமின்மையும் அரசியல் அதிகாரப் படிநிலைகளும் நிலவின என்பதற்கு ஏகப்பட்ட சான்றுகள் கிடைக்கின்றன.
இந்த ஆய்வுகளில் சில, ஜப்பானின் ஜோமோன் பண்பாடு போல வரலாற்றுக்கு முந்தைய காலத்துடன் தொடர்புடையவை. ப்ளோரிடாவின் கலுசா அல்லது பசிபிக் வடமேற்குக் கடற்கரையோரச் சமூகங்கள் போன்ற வேளாண்மையில் ஈடுபடாத சமுதாயங்களைக் குறித்த இனக்குழு வரலாற்றுப் பதிவுகளைப் பற்றிய ஆய்வுகளோ, அங்கிருந்த சமூகங்கள் வேளாண்மையில் ஈடுபடவில்லையென்றாலும் வர்க்க அடிப்படையில் இயங்கியதையும் பிரபுக்கள், பொதுமக்கள், அடிமைகள் எனப் பல்வேறு படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும் காட்டுகின்றன.
உணவுதேடி அலைந்து திரிந்த நிலையிலும் சமத்துவமின்மையின் அத்தகைய தீவிர வடிவங்களை உள்ளுணர்வுடன் புறமொதுக்கிய சமூகங்களையும் நம்மால் காணமுடிகிறது. குறிப்பிடத்தக்க வகைகளில் சமத்துவத்தைப் பின்பற்றிய சமூகங்களையும், காலச்சுழற்சியின் அடிப்படையில் சமத்துவ நிலைக்கும் அதிகாரப் படிநிலை அமைப்புக்கும் மாறிக்கொண்டிருந்த சமூகங்களையும் காண்கிறோம்.
வேளாண்மையின் தோற்றம் அதனியல்பில், ‘புரட்சிகரமானதல்ல’, உலகெங்கும் உள்ள கண்டங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிகவும் மெதுவாக அது நடைமுறைக்கு வந்துகொண்டிருந்ததது; அதன் விளைவுகளும் நிச்சயமாக கலவையாகத்தானிருந்தது என்பதையும் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுமுடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. மத்திய கிழக்கு, ஐரோப்பாவின் மத்தியப் பகுதிகள் போன்ற ஒரு சில சூழல்களில், தொடக்ககால வேளாண் கிராமங்களும் நகரங்களும் அவர்களுக்கு அருகே வாழ்ந்த வேட்டையாடி, உணவு சேகரித்தவர்களைக் காட்டிலும் மிகவும் சமத்துவத்துடன் விளங்கின என்பது தெளிவாகத் தெரிகிறது.
இன்றைய பொது விவாதங்களை வடிவமைப்பதிலும் எதிர்காலத்தைப் பற்றிய நமது சிந்தனைகளிலும் தொல்லியல் என்ன பங்கு வகிக்கிறது?
எதிர்கால உலகத்துடன் தொல்லியல் பல்வேறுபட்ட நிலைகளில் தொடர்புடையது. எல்லைத் தகராறுகளின் வரலாறு, அரசியலோடும் கலைப் பொருள்களின் சட்டவிரோத வர்த்தகத்தோடும் வணிகச் சுற்றுலாவோடும் பல்வேறு நிலைகளில் அது சிக்கிக்கொண்டிருக்கும் நிலையிலும் சூழலியல் பாதுகாப்புச் செயல்திட்டங்கள், மரபுக்குப் புத்துயிரூட்டுதல், சமூக நீதி ஆகியவற்றோடும் பின்னிப் பிணைந்துள்ளது.
உள்ளூர் அளவிலும், உலக அளவிலும் இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே அடிக்கடி தீவிர பதற்றங்கள் உருவாகின்றன. ‘ஒவ்வொன்றின் தோற்றமும்’ வெளியாகி, அதன் மொழிபெயர்ப்பு பல்வேறு மொழிகளில் வெளிவந்ததிலிருந்து உலகம் முழுவதும் தொல்லியல் ஆய்வுமுடிவுகளின்மீது மிகப்பெரும் ஆர்வம் எழுந்திருப்பதை நானும் நன்றாகவே உணர்ந்துள்ளேன். மனித குல வரலாற்றைக் குறித்த விமர்சனரீதியிலான, அறிவியல்பூர்வமான விசாரணையால் எல்லைகளைக் கடந்த ஒரு பொதுமொழியைப் பகிரமுடியும். மேலும், நம்முடைய இன்றைய உலக ஒழுங்கமைப்பின் தோற்றுவாய்கள் குறித்து நிலவும் நீண்டகால நம்பிக்கைகளைக் கட்டவிழ்க்கவும் உதவமுடியும்.
நன்றி: ‘தி யுனெஸ்கோ கூரியர்’, ஜூலை-செப்டம்பர் 2025
Leave a comment