மைக்கேல் மார்ஷல்
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ‘டெவன்’ ஏட்டின் அறிவியல் இதழாளர். ‘தி ஜெனிஸிஸ் க்வஸ்ட்’ (2020) நூலின் ஆசிரியர்.
கண்டறிதல்களையும் புதிய பார்வைகளையும் அடிப்படையாகக் கொண்ட அறிவியல்பூர்வமான முன்னேற்றமானது நிலைபெற்றுவிட்ட நம்பிக்கைகளைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிவருகிறது. அதற்கு, தொல்லியல் துறையும் விதிவிலக்கு அல்ல. வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த காலத்தில், அவர்களிடையே நுண்ணறிவுத்திறன் குறைவாக இருந்தது அல்லது வேளாண்மைக்கும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கும் இடையே காரண-காரியத் தொடர்புள்ளது என்பன போன்ற நீண்ட கால கருத்துகளை இப்போது மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
*

ப்ளோரிடாவின் (அமெரிக்கா) மேற்குக் கடற்கரையோரத்தில் உள்ள எஸ்டெரோ வளைகுடாவின் மத்தியில், மெல்லுடலிகளின் ஓடுகளைக் கொண்டு ஒரு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது. கீ குன்று என்ற அந்நகரம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டபோதிலும், அதன் தோற்றம் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தையது. அந்நகரில் இருந்த பூர்வீக அமெரிக்கக் குடிகளான கலுசா கட்டடக் கலைஞர்கள் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் அழிக்கப்பட்டபோதிலும், அவர்களின் சில வழித்தோன்றல்கள் ப்ளோரிடாவின் செமினோல் மக்களிடையே இன்னும் வாழ்கிறார்கள்.
இந்நகரம் பிரதானமாக இரண்டு குன்றுகளாலானது, சதுர கிலோமீட்டரில் பாதிக்கும் சற்றே அதிகமான அளவைக் கொண்ட இக்குன்றுகள், ஒரு கால்வாயினால் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. கலுசா சமூகம் மிகப் பெரும் எண்ணிக்கையில் மெல்லுடலிகளின் ஓடுகளைச் சேகரித்திருக்க வேண்டும், அவற்றை மிகவும் ஒருங்கிணைந்தவகையில் குவித்து வளைகுடாவின் நடுவே மிகச்சிறந்த வகையில் இந்த செயற்கைத் தீவை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த நோக்கின் அடிப்படையில், கலுசா தற்போதைய ப்ளோரிடாவை மிகவும் கட்டுப்படுத்தவே செய்கிறது.
நகரம் குறித்த நமது மனச்சித்திரங்களோடு கீ குன்று இன்னும் பொருந்திப்போகவில்லை. குறிப்பாக, அங்கு உணவு விளைவிக்கப்பட்டு விநியோகிக்கப்படவில்லை. கலுசா மக்கள் வேட்டையாடியும், உணவுப் பொருட்களைச் சேகரித்தும் மீன்பிடித்துமே வாழ்ந்துள்ளனர்; தங்களது சிறுதோட்டங்களில் மிளகு, மிளகாய் போன்று மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே அவர்கள் பயிர்களை விளைவித்துள்ளனர்.
கட்டுக்கதைகளும் தப்பெண்ணங்களும்
நெடுங்காலமாக நிலவிவரும் நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும்வகையில், கலுசா மக்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த நகரமானது, பெருமளவிலான வேளாண் நடவடிக்கைகள் இல்லாமலேயே அவர்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றாக வாழ்ந்ததையும் மிகப்பெரும் கட்டமைப்புகளை -குறிப்பாக இங்கு ஒரு செயற்கைத் தீவை- உருவாக்கியதையும் எடுத்துக்காட்டுகிறது. நமது வரலாறு குறித்தும் நாம் யார் என்பதைக் குறித்தும் நிலவிவரும் சித்தரிப்புகளை தொல்லியல் எப்படி நம்மை மறுபரிசீலனை செய்யவைக்கிறது என்பதற்கு கீ குன்று ஓர் உதாரணம் மட்டுமே. தொல்லியலைப் பொறுத்தவரையில், அது ஓர் அறிவியலாக மட்டுமில்லை; மற்ற அறிவியல் துறைகளைக் காட்டிலும் மனித முயற்சிகளை மிகவும் அதிகமாகக் கோருவதோடு நம்முடைய முன்முடிவுகள், கதையாடல்கள், தப்பெண்ணங்கள் ஆகியவற்றின் செல்வாக்கிற்கும் ஆட்பட்டதாக இருக்கிறது.
1800களில் வரலாற்றாளர்களும் தொல்லியலாளர்களும் மனித வரலாற்றை பண்பாடற்ற நிலையிலிருந்து நாகரிக நிலையை நோக்கிய நேர்கோட்டு வளர்ச்சியாகக் கண்டார்கள். அந்த வளர்ச்சிக்கு இடையூறாகக் கருதப்பட்ட எதுவும் – ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் மேற்குப் பகுதிகளுடைய வீழ்ச்சி போன்று – துயர நிகழ்வுகளாகவே பொருள்கொள்ளப்பட்டன. இத்தகைய கருத்துகள் காலனிய காலக்கட்டத்திற்கும் அமெரிக்காவிலும் தெற்குலகிலும் பூர்விகக் குடிகளை ஆவேசத்தோடு அழித்து ஒழித்ததற்கும் அறிவுப்பூர்வமான பாதுகாப்பை வழங்க முன்வந்தன.
இருபதாம் நூற்றாண்டிலிருந்து, தொல்லியலாளர்கள் இந்தக் கருத்துகளைக் கேள்விக்குட்படுத்தியதோடு கட்டுடைக்கவும் செய்தார்கள். வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த ஆதிக்குடிகள் பண்படாதவர்கள், நாகரிகமற்றவர்கள் என்ற கருத்து முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. ஆனால், பழையக் கதையாடல்களுக்குப் பதிலாகப் புதியவற்றைக் கண்டடைவது சவாலாக உள்ளது.
“மனித இனத்தின் மிக மோசமான தவறு”
வரலாற்றுக் கதையாடல்களை மாற்றியெழுதுவதில் தொல்லியல் எவ்வாறு வளர்ச்சிபெற்றுவருகிறது என்பதற்குத் தெளிவான உதாரணமாக சமூகத்தின் பரிணமிப்பில் வேளாண்மையின் பங்கு குறித்த கருத்தினைச் சுட்டலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் உணவுப் பயிர்களை விளைவித்துவந்த போதிலும் சற்றேறக்குறைய 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் சில சமூகங்கள் தங்களது முழு உணவையும் வேளாண்மையிலிருந்து பெறத் தொடங்கின. இதற்கு மிகவும் பிரபலமாக உதாரணம், மெசபடோமியாவில் உள்ள பிறைவடிவ வேளாண் நிலப்பகுதி. 19ஆம் நூற்றாண்டில் இந்நிலப்பகுதி வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது. பின்பு, சமகால தொல்லியலாளர்கள் சிலர் அது ஒரு இயற்கைப் பேரிடர் என்று மறுவிளக்கம் அளித்தனர்.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியரும் ‘துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு’ நூலின் ஆசிரியருமான ஜாரெட் டைமண்ட் 1996ல் வெளியாகி அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்டுவரும் கட்டுரையொன்றில் வேளாண்மையை “மனித இனத்தின் வரலாற்றில் மிக மோசமான தவறு” என்று அழைக்கிறார். துருக்கியிலும் கிரிஸீலும் கண்டெடுக்கப்பட்ட உறைபனி யுகத்தின் எலும்புக்கூடுகளைக் குறித்த ஆய்வுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தொடக்கக் காலத்தில் வேளாண்மையில் ஈடுபட்டவர்கள் அவர்களின் அண்மையில் வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்ந்தவர்களைக் காட்டிலும் உடல்நலம் குறைந்தவர்களாக இருந்தனர்: அவர்களின் உணவு வகைகள் பல்வகைப்பட்டதாக இல்லை, அவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருந்தனர், அவர்கள் நீண்ட ஆயுளையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் தம் வாதங்களை முன்வைக்கிறார்.
மேலும், வேளாண் நடவடிக்கைகள் சமூகங்களை நிலைகுலையச் செய்யும் பாதையிலும் இட்டுச்சென்றன. மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு வழியமைத்துக்கொடுத்தன- உணவு தானியங்களின் விநியோகத்தை யார் கையில் வைத்திருக்கிறாரோ அவர் மற்ற அனைவரையும் கட்டுப்படுத்த முடிந்தது.இந்நோக்கின்படி, வேளாண் நடவடிக்கைகள் தவிர்க்கவே முடியாத ஒரு வகைப் பொறியாக அமைந்தன. ஆதிக்க எண்ணம் கொண்ட ஆட்சியாளர்கள், நியாயமும் நீதியும் அற்ற நிலை, இறுதியாக பேரரசுகளின் வல்லாட்சி, அவற்றின் ஆயுதம் தாங்கிய போர்த் தாக்குதல்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவியலாதவையாக மாற்றின.
இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியது என்னவெனில், டைமண்ட் அவர்களின் கதையாடலையோ அது முன்வைக்கும் மனித பரிமாணங்கள் குறித்த எளிமைப்படுத்தப்பட்ட கருத்துகளையோ தொல்லியல் ஏற்றுக்கொள்ளாது என்பதுதான். தொடக்கக் காலத்தில் வேளாண்மையில் ஈடுபட்டவர்கள் அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த வேட்டையிலும் உணவு சேகரிப்பிலும் ஈடுபட்டவர்களைக் காட்டிலும் உடல்நலத்தில் பலவீனமாக இருந்தனர் என்று கோருவது தெளிவான பகுப்பாய்வுக்கு முன்னால் எடுபடாது. சாடல்ஹோயக் (துருக்கியர்கள்) போன்ற சில வேளாண் சமூகங்கள், நீண்ட ஆயுளுடன் வாழ்ந்துள்ளனர். எனவே, இந்த இருவகை சமூகங்களுக்கு இடையிலான உடல்நலக் காரணிகளின் அடிப்படையில் ஒரு பொது விதியை நிறுவிட இயலாது.
மேலும், நூற்றாண்டு காலமாக வேளாண்மை செய்ய முயன்று, பின்பு அதைக் கைவிட்ட சமூகங்கள் குறித்த உதாரணங்கள் உலகெங்கும் உண்டு. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ஜ் கற்சின்னத்தை நிறுவியோர் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்தவர்கள், என்றாலும் அவர்களின் முன்னோர்கள் வேளாண்மையைக் கைவிட்டவர்கள்.
அதே நேரத்தில், ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்த படிமுறைச் சமூக அமைப்பைக் கட்டமைத்த மக்கள்,அது சரிவர செயல்படவில்லை என்றதும் உடனடியாக அதைக் கலைத்ததும் உண்டு. தென்மேற்கு கொலராடாவில், ப்யூப்ளோன் மூதாதையர்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்க பூர்விகக் குடிகள் படிமுறைகளுடன் கூடிய மையப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்கினர். குன்றுகளையொட்டி அவர்களது குடியிருப்புகளைக் குடைந்துகொண்டனர். எனினும், அவர்களது தலைவர்கள் வறட்சிக்காலத்தில் உணவு விநியோகிப்பதை நிர்வகிப்பதில் தவறிவிட்டனர். வேளாண்மை ஒரு வலைப்பொறியாக அமையுமெனில், அத்தகைய பொறியானது பெரும்பாலான சமூகங்கள் வெளியேறிவிடுவதாக அமைந்துவிடும்.
பெருந்தரவு
இத்தகைய விவாதங்களைத் தீர்ப்பதற்கு, தொல்லியலாளர்கள் தற்போது வளர்ந்துகொண்டே இருக்கும் தரவுத் தொகுப்புகளின் மீது கவனம்குவிக்கத் தொடங்கியுள்ளனர். மனித சமூகங்கள் அனைத்துமே தமக்கென்று தனித்தப் பாதையைப் பின்பற்றினாலும் போதுமான தரவுகளைக் கொண்டு அவற்றை நோக்கும்பட்சத்தில் நம்மால் சில போக்குகளைக் கண்டறிய இயலும்: மீத்தரவு கதையாடல்களால், நமது வரலாற்றின் பொது அம்சங்களை விவரிக்க முடியும்.
“நாங்கள் பயன்படுத்த வாய்ப்புள்ள தரவுகள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. உண்மையில், தொல்லியலின் ஒரு பெரும்பகுதி கணினிகளையே பெரிதும் சார்ந்துள்ளது” என்கிறார் அமெரிக்காவின் புல்மேன் நகரிலுள்ள வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மதிப்புறு பேராசிரியர் திமோதி ஹோவ்லர்.
சமத்துவமின்மையின் உலகளாவிய நிலைகள் குறித்த ஆய்வுத் திட்டத்தில் அவர் பங்கெடுத்துக்கொண்டுள்ளார். இத்திட்டம் வரலாற்றிலும் அதற்கு முந்தைய காலத்திலும் வெவ்வேறு சமூகங்களிடையே நிலவிய சமத்துவமின்மையை ஆய்வுமுறைகளின்படி கண்டறியும் முயற்சியாகும். சமத்துவமின்மையின் பெரும்பாலான வடிவங்கள் தொல்லியல் ஆவணங்களில் பாதுகாக்கப்படவில்லையென்றாலும் வீட்டுவசதி என்ற ஒன்று மட்டும் தயார் நிலையிலேயே உள்ளது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தில், பெரும்பாலான வீடுகள் பொதுவாக ஒரே அளவில் அமைந்துள்ளனவா? அல்லது, சில வீடுகள் மற்றவற்றைக் காட்டிலும் மிகவும் வேறுபட்ட நிலையில் பெரிதாக உள்ளனவா?
வரலாற்றில் முதன்முறையாகத் தாவரங்களை வளர்க்கத் தொடங்கியதை அடுத்துவந்த ஆயிரமாண்டில், வீட்டுவசதிகளில் சமத்துவமின்மை அதிகரித்ததற்கான சான்றுகள் எதையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை. அதற்குப் பதிலாக, மற்ற காரணிகளே சமத்துவமின்மைக்கு இட்டுச்சென்றுள்ளன. குறிப்பாக, ஒரு பண்ணையில் அதற்குப் போதுமான உணவை அளிப்பதற்கு, குறிப்பிட்ட அளவிலான நிலம் தேவைப்படுகிறது; அங்குள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில் வேளாண் பரப்பும் விரிவடைகிறது- அதைத் தவிர அங்கு வெளிப்படையாக வேறு எந்த வாய்ப்புமுமில்லை. வேளாண் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் முதன்மைக் காரணியாக நிலம் மாறும்போது, சமூகச் சமநிலையின்மைகள் உருவெடுத்து, யார் அதிகப்படியான நிலத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்களுக்குச் சாதகமாக மாறுவதாகத் தோன்றுகிறது.
தொன்மைக் காலத்து மரபணுக்கள் குறித்த ஆய்வுகளில், மரபணுக்களின் உருமாற்றம் சம அளவில் நடந்துள்ளதாக இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழக செம்மொழி அமைப்பியல் துறை ஆய்வாளர் மாத்தியா கார்தாலானோ தெரிவிக்கிறார். மிகப்பெரும் அளவிலான மரபணு பகுப்பாய்வுகளின் முடிவுகள், வேளாண்மையின் தொடக்கக் காலத்தில், “ஒரே இடத்தில் வாழ்ந்த தனிநபர்களுக்கிடையிலான உறவுகள் அதற்கு முன் கணிக்கப்படுவதைக் காட்டிலும் பெருமளவிலான வேறுபாடுகளைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன” என்கிறார் அவர். “இது வேளாண்மையின் தொடக்கக்காலத்தின்போது செயலாற்றிய சமூக இயங்கியல் குறித்து நாம் மறுபரிசீலனை செய்வதற்கு இட்டுச்செல்கிறது.”
மிகப்பெரும் அளவிலான தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தும் மற்றொரு ஆய்வுத் திட்டம் செஷாட் ( உலக வரலாற்றுத் தரவு வங்கி). இந்த சர்வதேச , லாப நோக்கமற்ற, அறிவியல் ஆய்வுத் திட்டமானது 2011இல் தொடங்கப்பட்டு கடந்த 10,000 ஆண்டுகளில் சமூகங்கள் குறித்த தகவல்களின் பெரும் தரவுத்தொகுப்பைக்கொண்டு செயல்பட்டுவருகிறது. 2022இல் செஷாட் குழு, சமூகங்கள் ஏன் ‘சிக்கலானதாக’ இருக்கின்றன என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டது: அதாவது, நகரங்களை, படிநிலைச் சமூகத்தை, எழுதப்பட்டதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான சமயங்களை அவர்கள் ஏன் நிறுவினார்கள். சிக்கல்களுக்கான மிகவும் உறுதியான காரணி என்று அவர்கள் கண்டறிந்தது போர்களைத்தான்: குறிப்பாக, குதிரைப்படைகளைப் பயன்படுத்தும் போர் முறையின் பரவலும், இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பமும்தான். அண்டை அயலாருடன் மோதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்த சமூகங்கள் தங்கள் பாதுகாப்புக்கென ஒரு படையை உருவாக்கிக்கொள்ள வேண்டி மிகவும் மையப்படுத்தப்படுத்தப்பட்டன அல்லது தோல்வியைச் சந்தித்தன.
இது ஒரு சிறப்பான விவரிப்பு. இன்ன பிற சிறப்பான கதையாடல்களைப் போலவே, இதுவும் முற்றிலும் உண்மையாக இல்லாமல் போகலாம். செஷாட் குழுவினரின் ஆய்வுமுறைகளும் கண்டறிதல்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டுவருகின்றன. இந்த விவாதம் எத்தகைய முடிவுகளை எட்டும் என்பது விரைவிலேயே தெரிந்துவிடும். மேலும், இது வல்லுநர்களுக்கு இடையிலான விவாதம் மட்டுமல்ல. இந்த ஆய்வுகள், கடந்த காலத்தைப் பற்றிய சிறப்பான புரிதல்களை மட்டும் நமக்குக் கொடுக்கப்போவதில்லை. சமத்துவமின்மை, படிநிலைச் சமூக அமைப்புமுறைக்குச் சட்டபூர்வ ஏற்பு, காலநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற இன்றும் சமூகங்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களைக் குறித்த பார்வைகளையும் அளிக்கக்கூடியவை.
நன்றி: யுனெஸ்கோ கூரியர், ஜூலை-செப்டம்பர் 2025
Leave a comment