காதல் திரைப்படங்கள் தமிழுக்குப் புதிதல்ல. காதல் உணர்வும் அகத்திணைப் பாடல்களில் தொடங்கி அண்மைத் திரைப்படம் வரை தமிழர்களால் கொண்டாடப்பட்டுகிறது. அப்படிப்பட்ட காதல் கதை ஒன்றை இயக்குநர்கள் இருவர் இருவேறு வகையில் கையாண்டுள்ளனர். ஒருவர் கே.பாக்யராஜ், இயக்கிய படம் அந்த 7 நாட்கள் (1981); மற்றொருவர் மணிவண்ணன், இயக்கிய படம் இங்கேயும் ஒரு கங்கை (1984).

இயக்குநர்கள் இருவரும் பாரதிராஜாவின் சீடர்கள். இரு படங்களிலும் ஒரே சிக்கல். காதலித்த இருவர் பிரிந்துவிடுகிறார்கள். காதலிக்குத் திருமணம் ஆகிவிடுகிறது. கணவரும் வந்துவிடுகிறார். மண வாழ்க்கையில் அவர்கள் பொருந்துவதற்குக் காதல் நினைவு இடையூறாக இருக்கிறது. இந்த உணர்விலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதுதான் படங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது. இரு படங்களின் திரைக்கதையும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.

முதலில் அந்த 7 நாட்கள். இதில் நகர்ப்புறத்துக் காதல். காதலி வசந்தியாக நடிகை அம்பிகா வேடமேற்றிருப்பார். கணவர் வேடத்தில் ராஜேஷ். காதலன் கே.பாக்யராஜ். ராஜேஷ் மனைவியை இழந்த மருத்துவர். அவர் தாய் மரணப்படுக்கையில் கிடக்கிறார். பள்ளிக்குச் செல்லும் வயதில் குழந்தை உள்ளது. இந்தச் சூழலில் தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு மறு மணத்திற்கு ஒத்துக்கொண்டு மணமுடித்துக்கொள்கிறார். குடும்பத்தின் விருப்பத்தைமீறி வசந்தி, காதலனோடு சென்று மணமுடிக்கவிருந்த வேளையில், அது தடுக்கப்பட்டு, ராஜேஷுக்கு மணமுடித்துக் கொடுக்கப்படுகிறார்.

கணவன், மனைவி இருவரும் மனம்விட்டுப் பேச வாய்த்த முதலிரவறையில் வசந்தி தற்கொலைக்கு முயல்கிறார். ராஜேஷுக்கு அதிர்ச்சி. தற்கொலைக்குக் காரணமாக, தனது காதல் விவகாரத்தைச் சுட்டுகிறார் வசந்தி. தன் தாய் இன்னும் ஒரு வாரத்தில் இறந்துவிடுவார் என்பதால் 7 நாள்கள் பொறுத்துக்கொள்ளுமாறும், அதன் பின்னர் வசந்தியைக் காதலனுடன் சேர்த்துவைத்துவிடுவதாகவும் ராஜேஷ் நம்பிக்கை தருகிறார். காதலனிடம் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வசந்தி அதற்கு ஒத்துக்கொள்கிறார். அதே வீட்டில் இருக்கிறார். மாமியாருக்கும் குழந்தைக்கும் ஒத்தாசை செய்கிறர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுகிறார் ராஜேஷ்; காதலனைத் தேடி அழைத்துவருகிறார்.

யாருடன் தன் வாழ்நாளை எல்லாம் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என வசந்தி விரும்பினாளோ அந்தக் காதலனோடு அவள் செல்ல வேண்டிய சூழல். அவளை அழைத்துச் செல்ல ஒத்துக்கொண்ட காதலன் மிகச் சாதாரண ஒரு வேண்டுகோள் வைக்கிறார். வசந்தியின் தாலியை மட்டும் அறுத்துவிடச் சொல்கிறார். தாலியுடன் வசந்தியை அழைத்துச் செல்ல அவருக்கு உவப்பில்லை. தமிழ்ப் பெண்ணான வசந்தி காதலனுடன் சேருவதற்குத் தடையாய்த் தாலி ஒரு தூக்குக் கயிறு போல் அவரது தலைக்கு மேலே தொங்குகிறது. வசந்தி பதறுகிறார். தொட்டுத் தாலி கட்டியவர் ரத்தமும் சதையும் தன் முன்னால் நின்றுகொண்டிருக்கும் சூழலில் வசந்தியால் தாலியை அறுத்தெறிய இயலவில்லை. அறுத்தெறியத் தயங்கிக் கணவருடனேயே வசந்தி தங்கிவிடுகிறார். காதலன் அவர்கள் இருவரையும் மனதார வாழ்த்திவிட்டு அவர்கள் வாழ்விலிருந்து விலகிவிடுகிறான். காதலனுடன் சேர்த்துவைப்பதாகக் கணவன் வாக்குத் தந்ததால்தானே வசந்தி அந்த 7 நாட்களை அந்த வீட்டில் கழித்தார். எஞ்சிய வாழ்நாளை அங்கு எப்படிக் கழிப்பாள்?

சமூகத்திற்குப் பயந்து, தாலி என்னும் சடங்குப் பொருளுக்குக் கட்டுப்பட்டுத் தன் உணர்வை மறைத்துக்கொண்டு வாழும் வாழ்வுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டார் வசந்தி எனும் பொருள் தருகிறது இந்த முடிவுக் காட்சி. சற்று ஆழ்ந்து யோசிக்கும்வேளையில், பெண்களின் அக உணர்வுகளை வெளிப்படுத்தவியலாதபடி,  பண்பாட்டடையாளத் தொடர்ச்சி கொண்டதாக முன்னிருத்தப்படும் தாலி முதலிய விலங்குகள் தகத்தெறியப்படாதவரை வசந்திகளின் நிலைமை இதுவாகத்தான் இருக்கும் எனப் பொருள்கொண்டுவிட முடிகிறது. இந்தப் பொருளை உணர்த்த இயக்குநர் விரும்பிருக்கலாம். எனவே, இப்படியொரு முடிவைப் படத்திற்கு அளித்திருக்கலாம். இவை ஊகங்களே.

நாம் மேலே கண்டது வசந்தியின் கதை என்றால் அடுத்து ‘இங்கேயும் ஒரு கங்கை’யின் மருதாயினுடைய கதையைக் காணப்போகிறோம். மருதாயி வேடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார் நடிகை தாரா. மருதாயி வெற்றியம்பதி எனும் சிற்றூரைச் சார்ந்தவள். அங்கே அப்பா அம்மா என எவருமற்ற, அறுந்த காத்தாடிபோல் அலைந்து திரியும், காத்தமுத்துவைக் காதலித்தவள். சொந்த நிலமற்ற காதலனை அவள் தந்தை ஏற்க மறுக்க மறுகுகிறாள் மருதாயி. ஆனால், தந்தையை எதிர்க்க அவளால் இயலவில்லை. பட்டணத்துக்குப் பொருள் தேடிப் புறப்படுகிறான் காதலன். பொருளீட்டிவந்து மருதாயியைக் கைபிடிப்பதாகச் சூளுரைத்துச் செல்கிறான். ஆனால், அதுவரை பொறுக்க மாட்டாத அவள் தந்தை அவளுக்கு வசதி வாய்ப்பு கொண்ட ஒருவருக்கு மணமுடித்துக்கொடுக்கத் துடிக்கிறார். சமூகம் வலியுறுத்துகிறது. எதிர்த்துப் பேசவியலா மருதாயி மணமேடைக்குச் சென்றுவிடுகிறாள்.

அவள் கணவன் முத்தையா. ஒரு காலும் கையும் செயலிழந்த நிலையில் ஊன்றுகோல் துணையுடன் உலவித்திரிபவன். கைபிடித்த மனைவியை ஊன்றுகோலாய் நம்புகிறான். மனத்தில் காத்தமுத்து இருந்தாலும், முத்தையாவுக்கு உறுதுணையாகப் பகல் முழுவதும் இருக்கிறாள். இருள் கவிந்த பின்னர் அவளால் இயல்பான மனைவியாய் இருக்க இயலவில்லை. முத்தையாவும் அவள் விருப்பத்திற்கெதிராக அவளை எந்தவிதத்திலும் வற்புத்தவில்லை. மனமொத்த தம்பதி என்று சொல்ல வழியில்லாவிட்டாலும், மனத்தாங்கல் கொள்ளாத தம்பதியாக வாழத் தொடங்குகிறார்கள்.

இந்த நேரத்தில் பொருளீட்டித் திரும்பிய காத்தமுத்து, மருதாயிக்கு மணமான செய்தி கேட்டுத் துடித்துப்போகிறான். அவளைத் தேடி வருகிறான். முத்தையாவுக்கும் காத்தமுத்துவுக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. ஓர் உயிராபத்திலிருந்து முத்தையாவைக் காப்பாற்றுகிறான் காத்தமுத்து. பின்னர் காத்தமுத்துவை அவன் காதலி கைவிட்ட கதையும் அவனுக்குத் தெரியவருகிறது. ஆகவே, முத்தையாவுக்கு அவன் மீது பரிவு ஏற்படுகிறது. தனது வீட்டுக்கு அவனை அழைத்து வந்து சில நாள்கள் தங்கவைக்கிறான்.  பக்தர்கள் வேண்டியதை நிறைவேற்றித் தரும் கோயில் ஒன்றில் மருதாயியை வேண்டச் சொல்கிறார்கள் புகுந்த வீட்டினர். அவளும் வருகிறாள். முத்தையா வேண்டுகோளுக்கிணங்க காத்தமுத்துவும் வேண்டுதல் ஒன்றோடு வருகிறான். மனைவி தனக்காகத்தான் வேண்டியிருப்பாள் எனப் புரிந்துகொண்டு ஊன்றுகோல் தேவையில்லை என நினைத்துத் தூக்கி எறிகிறான்.  

ஆனால், மருதாயியோ விரைவில் தன் உயிர் பிரிய வேண்டுமென வேண்டியிருப்பாள். கணவன் மனநிலை அறிந்து மருதாயி மறுகுகிறாள். ஒரு நாள் காத்தமுத்துவும் மருதாயியும் பேசியதைக் கேட்ட முத்தையாவுக்கு காத்தமுத்துவின் காதலி மருதாயி என்பது தெரிந்துவிடுகிறது. இந்த வேளையில் நடத்தைசார் கொடும்பழி ஒன்று மருதாயி மீது விழுகிறது. கணவன் உள்ளிட்ட புகுந்தவீட்டினர் அனைவரும் அவளுக்கெதிராக நின்றுவிடுகிறார்கள். அவள் வெறுத்துப்போய், காத்துமுத்துவுடன் சென்றுவிடலாம் என்று முடிவெடுக்கிறாள்.   

அதை அறிந்த முத்தையா அவளைப் பிரியத்துடன் அனுப்பிவைக்க முடிவுசெய்கிறான். அது மட்டுமன்று; அவள் குற்றமற்றவள் என்பதை அறிந்திருந்தும் அவளைக் காதலனுடன் சேர்த்துவைக்கவே அவள் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்காதிருந்தான் என்பதையும் மருதாயி அறிகிறாள். இப்போது, அவள் வாக்குக் கொடுத்தபடி காதலனுடன் சென்றுவிடவா, கண்ணியமிகு கணவனுடன் தங்கிவிடவா என முடிவெடுக்க வேண்டிய தேவை எழுகிறது. மருதாயி கதாபாத்திரம் என்ன செய்கிறது என்பதுதான் முடிவுக் காட்சி. மருதாயி சொன்னபடி அந்த அதிகாலையில் காதலைத் தேடி ஓடக்கரை ரயில் நிலையத்திற்கு வருகிறாள். அங்கே காதலன் அவளுக்காகக் காத்திருக்கிறான். மருதாயி அவனிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறாள். தன்னால் அவனுடன் வரவியலாது என்பதையும் கூறுகிறாள். காத்தமுத்து கலங்கவில்லை. மருதாயியைப் புரிந்துகொண்டு அவள் நலம் வாழ வாழ்த்திவிட்டு வந்த வழியே சென்றுவிடுகிறான்.

முத்தையா, மருதாயி இருவரது செயலும், புறநானூற்றுப் பாடல் 204ஐ நினைவூட்டுகிறது. அதில் கழைதின்யானையார், ’கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர், ‘கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று எனப் பாடினார். வைத்துக்கொள் எனக் கொடுப்பது உயர்ந்ததுதான் ஆனால், அதைவிட உயர்ந்தது அதை மறுப்பது. உயர்ந்து தெளிந்த மனத்தோடு மருதாயியைக் காதலனுடன் அனுப்பிவைக்க முத்தையா விரும்பினான். ஆனால், அதைவிட உயர்ந்த மனத்துடன் அதை மறுத்துவிட்டாள் மருதாயி.   

அந்த 7 நாட்கள் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்துமே கே.பாக்யராஜ். இங்கேயும் ஒரு கங்கை படத்தின் கதை, வசனம் பி.கலைமணி. திரைக்கதை, இயக்கம் மணிவண்ணன். வசந்தியை வாழ்வைச் சிந்தித்தால் அவள், எளிதாகக் கயிறை அறுத்தெறிந்திருந்தால் அவளுடைய வாழ்வு நலம்பெற்றிருக்கும். மனித உணர்வான காதலைவிட சடங்கு சம்பிரதாயம் முக்கியமானவையா என்று நம்மால் எளிதில் சடங்குகளைத் தூக்கி எறிந்துவிட முடிகிறது. ஆனால், மருதாயி விஷயத்தில், அவளால் காதலுக்காக உறவைத் தூக்கி எறிய இயலவில்லை என்பதை நம்மால் முழுமையாக உணர்ந்துகொள்ள முடிகிறது. காதலைவிட சடங்கு, சம்பிரதாயங்கள் மேலானவையல்ல. அதே நேரத்தில் காதலைவிட மனிதம் மேலானது என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம்.

பொழுதுப்போக்குப் படங்களை வெறும் பொழுதுபோக்குப் படங்கள் என ஒதுக்கிவைத்துவிடல் ஆகாது. அவற்றிலும் நமது வாழ்வுக்குகந்த எத்தனையோ அம்சங்கள் கலந்தே காணப்படுகின்றன. வெறும் கல்லை அருள்மிகு கடவுளாகக் கருதுகிறார்கள் சிலர்; எழில்மிகு சிலையாகக் காண்கிறார்கள் சிலர்.  கல் கடவுளாவதும், சிலையாவதும் காண்போரைப் பொறுத்தது.

– செல்லப்பா

Leave a comment